மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.
காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.
சருமநோய்களை குணமாக்கும்
பூவரசு இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும். இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.
பூவரசனது வயிற்றுப்புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும். இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால் கருமை மாறும்.
மஞ்சள் நிறமுள்ள பாலை தோலின் மீது தடவினால் எச்சில்தழும்புகள் மாறும். மூட்டு வீக்கங்களுக்கு பூச வீக்கம் கரையும். பூவரசம் பட்டை எண்ணெயினால் வெள்ளை நோயும், சரும நோயும் நீங்கும்.
பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.
தொழுநோய் குணமாகும்
பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து செய்த சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உட்கொள்ள நாள்பட்ட தொழு நோய் தீரும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.
காணாக்கடி போன்ற பூச்சிக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.
வெள்ளைப்படுதல் குணமாகும்
வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.
வெள்ளைப் படுதல் நோய் ஏற்படும் பெண்களுக்கு, பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுக்க நோய் குணமாகும்.
கருத்தரிப்பதை தடை செய்யும்
' நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.' என்று பூவரச மரம் பற்றி பழம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.' என்று பூவரச மரம் பற்றி பழம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சம அளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.
குழந்தை பேற்றினை தள்ளிப்போட விரும்புபவர்கள் பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். புதிதாக திருமணமான பெண்கள் மாத விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கருத்தரிக்காது இது நல்ல கருத்தடை முறை. கருப்பைக் கோளாறுகளை நீக்கும். ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும். மூலக்கிருமிகளை அழிக்கும்.
மஞ்சள் காமாலை குணமடையும்
கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம். பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும். இது மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.
மேக நோய்க்கு மருந்து
உடல் கிருமிகளை அழிக்க வல்ல சக்தி கொண்டது பூவரசு என்று அகத்தியர் கூறியுள்ளார். இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும். இது சித்தர்கள் கண்ட அனுபவ மருந்தாகும்.
சொறி, சிறங்கு குணமாகும்
நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.
பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.
தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் வரிசையில் சிறந்த மரம் இந்த பூவரசு மரம். இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை. இம் மரங்களை வீட்டு உபயோகத்துக்காகவும், ஏனைய பயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்க முன்வரவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த இந்த மரம் தற்போது காண்பதற்கு அரிதாக மாறிவிட்டது. தற்போது கிராமப்புறங்களில் இந்த பூவரச மரம் காண்பதே அரிதாகிவிட்டது